‘வாத்தி கம்மிங் ஒத்து’ – ஐபிஎல் திருவிழா இன்று தொடக்கம்!!

0

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் 2020 திருவிழா இன்று முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் இரவு 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த சீசன் பைனலில் 1 ரன் வித்தியாசத்தில் கோப்பையை தவறவிட்ட சென்னை அணி, மும்பைக்கு இன்று பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர்.

ஐபிஎல் 2020 திருவிழா:

இந்த வருட மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா பரவல் ஏற்படுத்திய தாக்கத்தால் ஊரடங்கு, குவாரன்டைன், மாஸ்க், சானிடைசர் என சோர்ந்து போயிருந்த மக்களை குஷிப்படுத்தும் விதமாக பிசிசிஐ ஒரு முடிவை எடுத்தது.

அதன்படி கொரோனா பரவல் இல்லாத ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டது. சீன தயாரிப்புகளுக்கு இந்தியாவில் இருக்கும் எதிர்ப்பு காரணமாக விவோ நிறுவனம் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகியது. இதனால் ட்ரீம் 11 நிறுவனம் இம்முறை ஐபிஎல் போட்டிகளை வழங்குகிறது.

வீரர்களின் மனநிலை:

துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய நகர மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிக்கு பல நாட்கள் முன்னராகவே ஐக்கிய அரபு அமீரத்திற்கு வீரர்கள் விமானத்தில் பறந்தனர். அங்கு 3 நாட்கள் தனிமை, கொரோனா பரிசோதனை என பல்வேறு கட்ட பாதுகாப்பு நடைமுறைகளுக்கு பிறகு பயிற்சியை தொடங்கினர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இம்முறை பாதுகாப்பு கருதி குடும்பத்தினரை வீரர்களால் உடன் அழைத்துச் செல்ல முடியவில்லை. இது அவர்களின் மனநிலையை சற்று பாதிக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் பல மாதங்களுக்கு பிறகு நடக்கும் கிரிக்கெட் தொடர் என்பதால், வீரர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

சென்னை vs மும்பை:

தமிழ் சினிமாவிற்கு எப்படி தல, தளபதியோ அப்படிதான் ஐபிஎல் போட்டிக்கு சென்னை, மும்பை. கேப்டன் கூல் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹிட்மேன் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று முதல் போட்டியில் மோத உள்ளன. அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற மஹேந்திர சிங் டோனி பல மாதங்களுக்கு பிறகு களத்தில் இறங்க உள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

ஆனால் இம்முறை ஆரம்பம் முதலே சென்னை அணிக்கு சிக்கலாக உள்ளது. சாஹர் உட்பட 3 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால் பயிற்சி தடைபட்டது. பின்னர் சில நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். சென்னைக்கு மேலும் ஒரு அடியாக ‘சின்ன தல’ ரெய்னா, ‘சுழல் மன்னன்’ ஹர்பஜன் சிங் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகி உள்ளனர். இருப்பினும் தல தோனி தனது ‘மாஸ்டர் பிளான்’ மூலமாக மும்பையை காலி செய்ய ரெடியாக உள்ளார்.

மும்பை அணியை பொறுத்தவரை இம்முறை ரோஹித் சர்மா ஓப்பனிங் இறங்க உள்ளதாக அறிவித்து உள்ளார். வழக்கமாக ஒன் டவுன் இறங்கும் ஹிட் மேன் இம்முறை ஓப்பனிங் களமிறங்குவது சென்னைக்கு பெரிய பிரச்சனையாக இருக்கும். மேலும் பாண்ட்யா பிரதர்ஸ், பும்ராஹ், பொல்லார்ட் என மும்பை அசுர பலத்துடன் உள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற மும்பை, அதே உற்சாகத்துடன் இந்த சீசனை தொடங்குவதால் அதிரடி ஆட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here