இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம் – தொடங்கியது பேருந்து சேவைகள், திறக்கப்பட்டது கோவில்கள்!!

0

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று (செப் 1) முதல் பேருந்து பொதுப் போக்குவரத்து சேவை பல்வேறு விதிமுறைகளுடன் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து விதமான வழிபாட்டுத் தலங்களும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டு உள்ளது.

இயல்பு நிலையில் தமிழகம்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவதாக தெரியவில்லை. இருப்பினும் பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. 5 மாதங்களுக்கு மேலாக பூட்டப்பட்டு இருந்த ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக இன்று முதல் மாவட்டத்திற்குள் பேருந்து போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 20,000 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது. சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கி உள்ளது. இதனால் பணிகளுக்கு செல்வோர் நிம்மதி அடைந்து உள்ளனர். பல மாதங்களுக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்படுவதால் அவை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு, என்ஜின் உட்பட அனைத்து பழுதுகளும் சரிபார்க்கப்பட்டு உள்ளது.

ஒரு பேருந்தில் 50% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும் பல இடங்களில் போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இல்லாத காரணத்தால் அதிகப்படியான நபர்கள் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. மேலும் தனிமனித இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு உள்ளதால் மாவட்டத்திற்குள் வரும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு உள்ளது. ஒரு கோவிலில் ஒரு நாளைக்கு 2,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் பிரசாதம், காணிக்கை உள்ளிட்டவை வழங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மசூதிகளில் தொழுகை செய்ய வருவோர் அவரவர் வீடுகளில் இருந்தே தரை விரிப்பான்களை கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here