பரிதாபமாக தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் – கேதார் ஜாதவை வறுத்தெடுக்கும் மீம் கிரியேட்டர்ஸ்!!

0

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எளிமையாக வெற்றி பெற வேண்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கேதார் ஜாதவின் ஆமைவேக பேட்டிங்கால் பரிதாபமாக தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். அவரை அணியை விட்டு தூக்க வேண்டும் என கலாய்த்து மீம்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஐபிஎல் தொடரின் 21வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதியது. அதற்கு முந்தைய போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று இருந்ததால் ரசிகர்கள் உற்சாகத்துடன் போட்டியை பார்க்க தொடங்கினர். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் ராகுல் திரிபாதி (81) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 167 ரன்கள் குவித்தது.

பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. ஏற்கனவே 3 தோல்விகளை அடைந்த சென்னை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், டூ ப்ளசிஸ் களமிறங்கினர். வாட்சன் (50), ராயுடு (30) ரன்கள் அடிக்க மற்ற வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனியும் சுழற்பந்து வீச்சில் போல்ட் ஆக போட்டி கொல்கத்தா பக்கம் திரும்பியது.

பின்னர் களமிறங்கிய கேதார் ஜாதவ் பேட்டை மாற்றியது, பீல்டர்களை எண்ணியது என பரபரப்பாக காணப்பட்டதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்க, போட்டி தலைகீழாக மாறியது. 12 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே அடித்த ஜாதவ் கடைசி ஓவர் வரை பவுண்டரிகளை அடிக்க திணறினார். மறுபுறம் ஜடேஜா 21 ரன்களை அடித்தும் சென்னை 10 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது.

இத்தொடரில் பார்மில் இல்லாத ஜாதவை கடைசி நேரத்தில் களமிறக்கியது ஏன்? தமிழக வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பு வழங்காமல் தொடர்ந்து சொதப்பி வரும் ஜாதவ் அணியில் எடுப்பது எதற்காக? அதிரடி ஆட்டக்காரர் ப்ராவோ இருக்கும் போது தோனி எதற்காக ஜாதவை களமிறக்கினார்? என ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

சரியாக விளையாடாத முரளி விஜயை அணியை விட்டு தூக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ஜாதவை வெளியேற்ற தயங்குவது ஏன் என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது. வரும் போட்டிகளில் ஆவது அணியில் சில மாற்றங்களை செய்தால் மட்டுமே சென்னை பிளே ஆப் செல்வதை நினைத்து பார்க்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here