110 வது விதியின் கீழ் முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகள் – 3,501 நடமாடும் நியாய விலைக் கடைகள் அமைக்கப்படும்..!

0

சட்டசபையில் 110 வது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு 3,501 நகரும் நியாய விலைக்கடைகள் அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதலைமைச்சர் அறிவித்த அறிவிப்புகள்..!

  • மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு, 3,501 நகரும் நியாய விலைக்கடைகள் 9.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்படும்.
  • 105 கூட்டுறவு கடன் நிறுவனங்களுக்கு, 27.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொந்த அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்படும்.
  • 95 கூட்டுறவு நிறுவனங்கள், 14.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்படும்.
  • கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் முதல் கட்டமாக கூடுதல் கட்டமைப்பு வசதிகள் 60 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.
  • திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் இயற்கை காரணங்களினால் மூடாதவாறு இருக்க, 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு மற்றும் மண்டபம் தெற்கு கிராமங்களில் 20 கோடி ரூபாய் செலவில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.
  • காஞ்சிபுரம் மாவட்டம், புது குப்பம் மற்றும் உய்யாலி குப்பம் கிராமங்களில், 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும்.
  • விவசாயிகளின் பொருளாதார இழப்பினைத் தவிர்க்கும் வகையில், 90.35 லட்சம் கால்நடைகளுக்கு 22.03 கோடி ரூபாய் செலவில் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும்.
  • உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை மேலும் உயர்த்தவும், கிராமப்புற மாணவர்கள் பயன் பெறவும், உயர் கல்வித்துறை மூலம் ஏழு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும். வரும் கல்வி ஆண்டு முதல் இக்கல்லூரிகள் செயல்படும்.
  • சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், மஞ்சக்குட்டை ஊராட்சி, செம்மடுவு கிராமத்தில் 15.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அளவிலான புதிய கூட்டுறவு பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.
  • காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டு றவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு சென்னை, தண்டையார்பேட்டையில் அந்நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள இடத்தில் 5.65 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், காஞ்சிபுரம் நகரிலுள்ள மற்றொரு இடத்தில் 4.15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் 2 திருமண மண்டபங்கள் கட்டப்படும்.
  • 30 வருடங்களுக்கு மேலான, எதிர்காலத்தில் பயன்படுத்த இயலாத அளவிற்கு சேதமடைந்த கிடங்குகளை முற்றிலுமாக அகற்றி, சென்னை ஐஐடியின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்பத்துடன், ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய நவீன சேமிப்புக் கிடங்குகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் வேளாண் பெருமக்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லினை பதப்படுத்தி சேமித்து வைத்திடும் வகையில், 75 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன விஞ்ஞான தொழில் நுட்பத்துடன் கூடிய நெல் சேமிப்பு கொள்கலன்கள் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • 1.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 40 புதிய கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்படும். மேலும், 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களாகவும், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகளாகவும், 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகர்கோவில் கால்நடை மருத்துவமனை, 24 மணி நேரமும் செயல்படும் முதல்தர சேவைகள் வழங்கும் கால்நடை பன்முக மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்படும்.
  • பல்வேறு தரப்பினரிடமிருந்தும், பெற்றோர்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் ஏற்கனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு பதிலாக. 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், மேலும் 30 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படும்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here