நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு ஜன.22ல் தூக்கு – டெல்லி உயர்நீதிமன்றம்

0
நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு ஜன.22ல் தூக்கு - டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லியில் நிர்பயா என்ற பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்கு நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.  அப்பெண்ணின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிர்பயா வழக்கு விபரம்:

டெல்லியில் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். 2013-ம் ஆண்டு சிறையில், ராம்சிங் என்ற குற்றவாளி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 18 வயதை எட்டாத ஒருவர் 3 ஆண்டுகள் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை காலம் முடிந்த பிறகு, அவர் விடுவிக்கப்பட்டு விட்டார்.

எஞ்சியுள்ள நான்கு குற்றவாளிகளான அக்ஷய் குமார் சிங், முகேஷ், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து குற்றவாளிகள் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அதை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மரண தண்டனைக்கு உள்ளான குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். அதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தள்ளுபடி செய்துவிட்டார்.

டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு:

இந்த நிலையில் நால்வரின் மரண தண்டனை உறுதி செய்வது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் இறுதி கட்ட விசாரணை இன்று நடைபெற்றது. கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சதீஷ்குமார் அரோரா முன்னிலையில் இரு தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அரசு தரப்பு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், நாட்டின் எந்த ஒரு நீதிமன்றத்தில் முன்னிலையிலும் அல்லது குடியரசுத்தலைவரின் முன்னிலையிலும் குற்றவாளிகள் தொடர்பான மனு, நிலுவையில் இல்லை. எனவே இவர்களது தண்டனை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. அதேநேரம், குற்றவாளிகளான முகேஷ் மற்றும் வினய் ஷர்மா ஆகியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தாங்கள் தயாராகி கொண்டிருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்கு நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிட வாரண்ட் பிறப்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here