போடு, போடு அதெல்லாம் அடிக்க மாட்டான் – ராஜஸ்தானை திட்டமிட்டு வீழ்த்திய தினேஷ் கார்த்திக்!!

0

ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் 37 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருந்த கொல்கத்தா 2வது இடத்திற்கு முன்னேறியது. இப்போட்டியில் சக வீரரிடம் தமிழில் கேப்டன் தினேஷ் கார்த்திக் பேசியது வைரலாகி வருகிறது.

கொல்கத்தா vs ராஜஸ்தான்:

முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதே உற்சாகத்துடன் நேற்று களமிறங்கியது. டாஸ் வென்ற கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியில் சுப்மான் கில் (47), மோர்கன் (34) தவிர பிற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. இதனால் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. ஏற்கனவே 2வது போட்டியில் 226 ரன்களை சேஸ் செய்த அணிக்கு இது பெரிய ஸ்கோர் ஆக தெரிவியவில்லை.

ஆனால் ராஜஸ்தான் வெற்றி பெற்ற முதல் 2 போட்டிகளும் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. அது சிறிய மைதானம். ஆனால் நேற்று போட்டி நடைபெற்ற துபாய் பெரிய மைதானம் என்பதை வீரர்கள் மறந்து விட்டனர் போல. இதனாலே ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், பட்லர் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

கொல்கத்தா அணியின் பந்துவீச்சு நேற்று அசுர பலத்துடன் இருந்தது. இளம் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, கம்லேஷ் நாகர்கோட்டி, ஷிவம் மாவி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி 58 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். 2வது போட்டியில் 5 சிக்ஸர்கள் அடித்து ராஜஸ்தானை வெற்றி பெற வைத்த ராகுல் திவேதியா பொறுமையாக ஆட்டத்தை தொடங்கினார். அவர் சுழற்பந்து வீச்சில் தடுமாறுவார் என்பதை அறிந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் வருண் சக்ரவர்த்தியை பந்துவீச செய்தார்.

இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தியிடம் ‘கூக்ளி’ போடுமாறு கூறினார். அதற்கு வருண், ‘ராகுல் அதனை சுற்றி அடித்து விடுவார்’ என கூறினார். பதிலுக்கு தினேஷ் கார்த்திக், ‘போடு, போடு அதெல்லாம் அடிக்க மாட்டான்’ என்றார். இருவரது உரையாடலும் ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. அதுமட்டுமின்றி தினேஷ் கார்த்திக் சொன்னதை போல, ராகுல் அந்த ஓவரிலேயே போல்ட் ஆனார்.

இதன் மூலம் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 37 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்தது. இதனால் முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான் அணி 3வது இடத்திற்கு சென்றது. இப்போட்டியில் தனது மாஸ்டர் பிளான் மூலம் ராஜஸ்தானை வீழ்த்திய கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்கை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here