ஜேஎன்யூ போராட்டத்தில் நடிகை தீபிகா படுகோன் பங்கேற்பு

0
ஜேஎன்யூ போராட்டத்தில் நடிகை தீபிகா படுகோன் பங்கேற்பு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதிக் கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து, கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் மிகப்பெரும் போராட்டத்தை நடத்திவருகின்றனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, முகமூடி அணிந்தவாறு ஜே.என்.யூ-வில் உள்ள சபர்மதி விடுதிக்குள் நுழைந்த 50 மர்ம நபர்கள், அங்கிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவர் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

நாடு முழுவதும் போராட்டம்

ஜே.என்.யூ-வில் நடந்த தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான கல்லூரிகளிலும் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து தங்கள் பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜே.என்.யூ மாணவர்களே பெரும் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். அதில், முன்னதாக தாக்குதலில் காயமடைந்தவர்களும் கலந்துகொண்டுள்ளனர். நேற்று இரவு முழுவதும் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

தீபிகா படுகோன் பங்கேற்பு

இந்நிலையில், பாலிவுட் பிரபல நடிகை தீபிகா படுகோன், திடீரென ஜே.என்.யூ-வுக்கு வந்து, மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். நேற்று மாலை 7:30 மணிக்கு பல்கலைக்கழகத்தின் தென்மேற்கு கேட் வழியாக வந்த தீபிகா, போராட்டம் நடத்திய மாணவர்களுடன் நின்று அவர்களுக்குத் தன் ஆதரவைத் தெரிவித்தார்.

நாம் பயப்படவில்லை

தான் போராட்டத்தில் கலந்துகொண்டது தொடர்பாக என்.டி.டி.வி ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள தீபிகா, “நாம் பயப்படவில்லை என்று பெருமைப்படுகிறேன். போராட்டத்தால் நம் எண்ணங்களை வெளிப்படுத்த முடியும் என நினைக்கிறேன். போராட்டம் பற்றியும் நாட்டின் எதிர்காலம் பற்றியும் நாம் சிந்திக்கிறோம் என்பது உண்மை என்று நினைக்கிறேன். மாணவர்களுக்காகக் குரல்கொடுக்கவும் தங்களை வெளிப்படுத்தவும், மக்கள் சாலைகளில் இறங்கி நின்று போராடுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில், நாம் மாற்றத்தைக் காண விரும்பினால் இது முக்கியமானதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here