இந்தூரில் அசத்திய இந்திய அணி – இந்திய பவுலர்கள் அபாரம்

0
India vs Sri Lanka T20I 2020

இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி-20′ தொடரில் பங்கேற்கிறது. கவுகாத்தியில் நடந்த முதல் போட்டி மழை காரணமாக ரத்தானது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி இந்துாரில் நடந்தது.’டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சகால், ஜடேஜா உள்ளிட்டோருக்கு இடம் கிடைக்கவில்லை.

இலங்கை திணறல்

இந்திய அணியின் அபாரமான பவுலிங்கை தாக்குப் பிடிக்க முடியாமல் இலங்கை பேட்ஸ்மேன்கள் திணறினர். இலங்கை அணிக்கு அவிஷ்கா (22), குணதிலகா (20), ஒஷாதா (10) சீரான இடைவெளியில் அவுட் ஆகினர். திசரா பெரேரா 34 ரன்கள் எடுத்தார். ராஜபக்ச 9 ரன் எடுத்தார். ஷர்துல் தாகூர் வீசிய 19 வது ஓவரின் 2வது பந்தில் தனஞ்செயா (17) கிளம்பினார். இதே ஓவரின் கடைசி இரண்டு பந்தில் உதானா (1), மலிங்கா (0) அவுட்டாகினர்.பும்ராவின் கடைசி ஓவரில் ஹசரங்கா, ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடிக்க, இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது. ஹசரங்கா (16), லகிரு (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்திய அணி சார்பில் ஷர்துல் தாகூர் 3, நவ்தீப் சைனி 2, குல்தீப் 2 விக்கெட் சாய்த்தனர்.

சிறப்பான துவக்கம்:

அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல், ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த போது, சிக்சருக்கு ஆசைப்பட்ட ராகுல் (45) போல்டானார். அடுத்த சில நிமிடங்களில் தவான் (32) அவுட்டானார். பின் ஸ்ரேயாஸ் ஐயர், கோஹ்லி இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர்.ஹசரங்கா வீசிய 16வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 17 ரன்கள் எடுத்தார் ஸ்ரேயாஸ். .

இந்நிலையில் ஸ்ரேயாஸ் 34 ரன்னுக்கு அவுட்டானார். கடைசியில் கோஹ்லி ஒரு ‘சூப்பர்’ சிக்சர் அடிக்க, இந்திய அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது. கோஹ்லி (30), ரிஷாப் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here