
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு 3225 தேர்வு மையங்களில் இன்று (மார்ச் 13) நடைபெருகிறது. இதில் பள்ளி மாணவர், மாற்றுத்திறனாளி, சிறைவாசி, 3ம் பாலினத்தவர் என 8.75 லட்சம் பேர் தேர்வு எழுதி வருகின்றனர். இவர்களுக்கான குடிநீர் வசதி, இருக்கை வசதி, மின்சாரம் உள்ளிட்டவைகள் தடங்கலின்றி கிடைக்கும்படி தேர்வுகள் இயக்ககம் ஏற்படுத்தி உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த பொதுத் தேர்வுகளில் மாணவர்களுக்கு கால அவகாசமாக 3.15 மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் வினாத்தாளை படித்து பார்க்க 10 நிமிடம், பதிவெண் போன்ற குறிப்புகளை எழுத 5 நிமிடமும் மற்றும் தேர்வுக்காக 3 மணி நேரம் என ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிட் அடிப்பது உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்களை கண்காணிக்க 3100 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் காணொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் “பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எந்தவித பதட்டமும் இன்றி தன்னம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் செயல்பட வேண்டும். தேர்வுக்காக படிக்கிறோம் என பயப்படாமல் ஆழ்ந்து கவனித்து புரிந்து படியுங்கள். இந்த தேர்வு உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வுக்கான பாதை. எனவே உங்களின் வெற்றிக்கு உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து வாழ்த்துகிறேன்” என உருக்கமாக எடுத்துரைத்துள்ளார்.