சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உட்பட 5 காவலர்கள் கைது – சிபிசிஐடி அதிரடி!!

0

சாத்தான்குளம் வியாபாரிகள் மரண வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ் உள்ளிட்ட 5 காவலர்கள் கைது சிபிசிஐடி போலீசால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு விவகாரம்..!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்ததாக கடந்த 19ம் தேதி சாத்தான்குளம் எஸ்ஐ ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்கள் காவல்துறை கடுமையாக தாக்கியதால் தான் உயிரிழந்ததாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து சாத்தான்குளம் போலீசார் அனைவரும் மாற்றம் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தானாக முன்வந்து விசாரித்த மதுரை ஐகோர்ட் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

எஸ்.ஐ.,ரகு கணேஷ் கைது..!

மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் சிபிஐ இந்த வழக்கை ஏற்கும் வரை இடைக்காலமாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் இது தொடர்பான ஆவணங்களை நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் 176 சிஆர்பிசி பிரிவின் கீழ் இரு எப்ஐஆர்கள் பதிவு செய்தனர்.

வியாபாரிகள் பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகிய இருவரையும் போலீசார் தாக்கியதற்கான முக்கிய தடயங்களும் லத்தியும் ஆவணமாக கிடைத்துள்ள நிலையில், பெண் போலீசின் சாட்சியம், கோவில்பட்டி அரசு மருத்துவரின் காயங்கள் குறித்த பதிவு, உடற்கூறு அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். இந்திய தண்டனைச் சட்டம் 302, 342, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து எஸ்.ஐ.,ரகு கணேஷ் கைது செய்யப்பட்டார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது..!

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், ஏட்டுகள் முருகன், முத்துராஜ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று காலை 3 பேரையும் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தொடர்ந்து 3 பேரும் மாவட்ட முதன்மை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டவுள்ளார்கள். இதற்கிடையே வழக்கு குறித்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 5வது நபராக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உள்ளிட்ட 5 காவலர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here