திபெத்திய மக்களின் பாரம்பரிய உணவு மோமோஸ். இது தற்போது தமிழக மக்களையும் கவர்ந்து விட்டது. தினமும் ஒரு பிளேட் ஆவது சாப்பிட்டு பழகிப்போன மக்கள் தற்போது ஊரடங்கால் வீட்டிலேயே இருக்கின்றனர். கவலைப்படாதீங்க மக்களே, உங்களுக்கு தான் இந்த பதிவு. சுவையான மற்றும் சத்தான சிக்கன் மோமோஸ் வீட்டுலயே எப்படி செய்றதுன்னு பாப்போம் வாங்க.
தேவையான பொருட்கள்:
சிக்கன் பூரணம் செய்ய, சிக்கன் – 1 கப்
பச்சை பட்டாணி – 1/2 கப்
நறுக்கிய வெங்காயம் – 1/2 கப்
பொடியாக நறுக்கிய பூண்டு – 1 tsp
பொடியாக நறுக்கிய இஞ்சி – 1 tsp
சோயா சாஸ் – 1/2 tsp
சிவப்பு மிளகாய் – 1
மிளகு உடைத்தது – 1/4 tsp
மோமோஸ் மாவு பிசைய, மைதா – 2 கப்
உப்பு – தே.அளவு
பேக்கிங் பவுடர் – 1 1/2 tsp
செய்முறை:
சிக்கன் மோமோஸ் செய்ய தொடங்கும் முன் சிக்கன் மற்றும் பட்டாணியை தனித்தனியே வேக வைத்துக்கொள்ளுங்கள். மாவு பிசைய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிசைந்து 20 நிமிடங்களுக்கு ஈரத்துணியால் மூடி ஊற வைக்கவும்.
அது ஊறிக் கொண்டிருக்கும் சமயத்தில் அடுப்பில் கடாய் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு, வெங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வதக்கவும். அடுத்ததாக வேக வைத்த சிக்கனை பிச்சி போட்டு மற்றும் பட்டாணியை சேர்த்து பிறட்டவும்.
சோயா சாஸ், உப்பு சேர்க்கவும். உப்பு சேர்க்கும்போது கவனம் அவசியம். சோயா சாஸில் ஏற்கெனவே உப்பு இருக்கும். மசாலாக்கள் நன்கு கலந்து பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்துவிடவும்.
அடுத்ததாக ஊற வைத்த மாவை சின்ன சின்ன பந்துகளாக உருட்டி சப்பாத்தி உருட்டுவது போல் சிறு சிறு வட்டங்களாக உருட்டவும். மாவு தடியாக உருட்டக் கூடாது. பின் செய்து வைத்துள்ள சிக்கன் பூரணத்தை ஒரு ஸ்பூன் வைத்து பின் கொழுக்கட்டையை மூடுவதுபோல் மூடவும்.
இப்படியாக ஒவ்வொரு உருண்டைகளாக செய்யவும். அடுத்ததாக இட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதற்குள் இட்லி தட்டில் மோமோஸை அடுக்கி வைய்யுங்கள். ஒன்றன் மேல் ஒன்று வைக்கக் கூடாது.
தண்ணீர் கொதித்த பின்னர், அடுக்கி வைத்துள்ள மோமோஸ் தட்டை குக்கரில் வைக்கவும். 15 – 20 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். நேரம் முடிந்ததும் இறக்கிப் பார்த்தால் மோமோஸ் நன்கு வெந்திருக்கும்.
பின்பு சூடான, சுவையான சிக்கன் மோமோசை ருசிக்கலாம்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |