சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து “ஏய் இந்தம்மா” டயலாக் மூலம் பல லட்சம் ரசிகர்களை கட்டிப் போட்ட குணசேகரன் என்ற மாரிமுத்து நேற்று எதிர்பாரா விதமாக மாரடைப்பால் காலமானார். இவரது இறப்பு திரையுலகினருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவரது உடல் இன்று அவர் சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்குகளை முடித்துவிட்டு அவரது மகன் அகிலன் பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
என் அப்பா இறப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று தான். எங்கள் குடும்பம் இதிலிருந்து மீள்வதற்கு சில காலங்கள் ஆகலாம். ஆனால் அதற்கான அனைத்து தன்னம்பிக்கையும் எங்கள் அப்பா கொடுத்துள்ளார். நேற்று எங்களுக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. மேலும் என் அப்பாவுக்கு நான் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்பதுதான் ஆசை. இதுவரை எனக்கும் அந்த ஐடியா கிடையாது. இனி வரும் நாட்களிலும் என் அப்பாவின் இந்த ஆசையை நிறைவேற்றுவேன் என அவரது மகன் அகிலன் உருக்கமாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.