சென்னை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மழை மற்றும் புரவி புயலால் பாதிக்கப்படும் என்ற வானிலை மையத்தின் தகவலால், தென்மாவட்ட மக்கள் தேவைகள் இன்றி வெளியே வரவேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளார்.
புயல் எச்சரிக்கை:
வானிலை ஆய்வு மையமானது, புரவி புயல் வங்கக்கடலில் உருவாகி, இலங்கையில், கரையை கடந்து, மீண்டும் அரபிக்கடலில் புதிய புயலாக மாறும் என தெரிவித்துள்ளது. பின்பு இந்த புயலானது சென்னை உள்ளிட்ட தென்மாவட்டங்களை கடந்து, அரபிக்கடலை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட பகுதிகளில், நாளை கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதிக மழை பெய்யும் மாவட்டங்களாக புதுக்கோட்டை, சிவகங்கை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஆலோசனை:
இத்தகைய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்களை அடுத்து இதுகுறித்து தமிழக முதல்வர், எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், முதல்வர் மக்களுக்கு புயல் குறித்த பாதுகாப்பு நடவடிக்கையையும், சில எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதன்படி, சென்னை, குமரி, நெல்லை மாவட்டங்களுக்கு, டிசம்பர் 1 முதல் 4 வரை பெருமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், இம்மாவட்ட மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டார். மேலும் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள், கரைக்கு திரும்பும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார். மீன் பிடிப்பதற்காக அண்டை மாநிலங்களுக்கு சென்றுள்ள மீனவர்கள் அண்டை மாநிலங்களிலேயே கரைக்கு திரும்பும்படி கேட்டுக்கொண்டுள்ளார். அண்டை மாநில அரசுகளிடம் இது குறித்து உதவிகள் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பு:
பெருமழை காரணமாக மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் உள்ளது எனவும் இதனால் மக்கள் தங்கள் முக்கிய ஆதாரமான ரேஷன்கார்டு, ஆதார் கார்டு போன்றவற்றை பாதுகாப்பாக வைத்து கொள்ளும் படி கேட்டுக்கொண்டுள்ளார். தகுந்த முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், மக்கள் யாரும் புயல் குறித்து அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.